ஐயோவும் அரோகராவும்

Posted by Unknown திங்கள், 20 ஆகஸ்ட், 2012 0 கருத்துகள்

மனிதனின் பறப்பு முயற்சிகளில் மைல் கற்களில் ஒன்று உலங்குவானுர்திக் கண்டுபிடிப்பு. காற்றாடிகளின் உதவியுடன் பறக்கும் தொழில்நுட்பம் முதன்முறையாக 1907 ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த போல் கோர்ணு 6 மீற்றர் நீளமான உலங்குவானுர்தியைப் பறக்க வைத்து ஹெலிகளின் சரித்திரத்தைத் தொடக்கிவைத்தார். ஏனைய வானுர்திகளைப் போல் அல்லாமல் இது செங்குத்தாகவே மேல் எழுவதுடன் விரும்பிய திசைகளுக்கு உடனடியாகவே திரும்பிக்கொள்ளும். இத்தகைய தன்மைகளே ஹெலிகளை போர்களின் வாகனமாக்கியது.
 நல்லூர்க் கந்தன் லட்சக்கணக்கான தூக்கிய கைகளை விலக்கியபடி தேரில் ஏறி வலம்வர தொடங்கியிருந்தான். தேருக்காக தன்னுடைய சீருடைகளை களைந்துவிட்டு விடிகாலையிலேயே வேட்டியோடு வந்திருந்த கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க அடிக்கடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அவர் முகத்தில் மலர்ச்சி.

 சடசடத்தபடி வட்டமடித்த ஹெலிகொப்ரர் ஒன்று கந்தனின் தேர் மீது பூக்களை வாரிச் சொரியத் தொடங்கியது.
"அரோஹரா! 
வள்ளி மணவாளனுக்கு அரோஹரா! 
நல்லூர் கந்தனுக்கு அரோஹரா''

கொஞ்ச நேரமாக சோர்ந்துகிடந்த பக்தர்களின் உதடுகள் ஹெலியின் பூமாரியோடு மீண்டும் அரோஹராவை  உச்சரிக்கத் தொடங்கின. சற்றுப்பதிவாக அந்தக் ஹெலி வட்டமடித்தபோது, "உங்கபார்! சப்பாத்தோட நிண்டு பூப் போடுறாங்கள்'' என்று ஹெலியின் வாசலை நோக்கி பக்தர்களின் விரல்களும் கண்களும் நீண்டன. 

கந்தனின் தேரில் சொரிந்து கிடந்த பூவிதழ்களில் ஏனோ மகரந்த வாசனை வரவேயில்லை. மாறாக அவற்றிலெல்லாம் நாள்பட்ட குருதியின் வாடையே அடிப்பதாக முகில் கூட்டங்களில் தொற்றியிருந்தபடி கந்தனின் தேருலாவை கண்டுகளித்துக்கொண்டிருந்த  தேவர்கள் சொல்லிக்கொண்டார்கள். 

கூடவே  ஒவ்வொன்றாய் பிரிகையடைந்து, சகதியாகிக் கிடந்த நிலத்தில் கொட்டுண்டுகிடந்த பூவிதழ்கள் பிய்ந்துபோன சதைத் துண்டங்கள் போலவும், பிணக்குவியல்கள் போலவும் தமக்குப்பட்டதாகவும் அதே வானுலகவாசிகள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 
* * *

ஹெலிகள் பற்றிய ஆரம்பப் பதிவுகள் அச்சமூட்டுபவையாகவே இருந்தன. 90களில் விடிகாலை இருள் கலைய முன்னரே வானத்தில் ஹெலி வட்டமிடத் தொடங்கிவிட்டால் அன்றைக்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்துவிடும். புலிகளின் நடமாட்டங்கள், கள நிலவரங்கள், பொதுமக்கள் இடம்பெயரும் திசை என்பவற்றை சில ஹெலிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும். 

இன்னொரு தொகுதிக் ஹெலிகள் பிரதான படைத்தளங்களில் இருந்து துருப்புகளை களமுனைக்கு கொண்டு வந்தபடியே இருக்கும். அவற்றுக்கு பக்கபலமாக கண்மூடித்தனமான சூட்டாதரவை வேறு சில ஹெலிகள் வழங்கும். 

அநேகமாக ஹெலிகளில் இருந்து பெறப்படும் 50 கலிபர் துப்பாக்கிச் சன்னங்கள் சுவர்களையும், பதுங்கு குழிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகளையும் சல்லடையிடும். 
"ஐயோ!'' இந்த ஒரே ஒரு ஓலம் மட்டுமே ஊரெங்கும் பரவி அதிரும்.  

விமானங்களைக் காட்டிலும் மிகத் தாழ்வாக களமுனையில் நடமாடும் ஹெலிகளின் கண்களில் இருந்து தப்புவதற்கு இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் பட்டபாடு கொஞ்சநெஞ்சமல்ல. 

சில வேளைகளில் ஹெலிகளின் கைகளையும் மீறி, மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்கள் பற்றி, விமானங்களுக்கு போட்டுக்கொடுத்து அங்கு மனிதப் பலியை நிறைவேற்றவும் ஹெலிகளே முன் நின்றன. 

ஆனாலும் மாலை வேளைகளில் இரண்டு ஹெலிகள் ஒன்றாக வந்தால் அதன் அர்த்தம் வேறு. நீண்டநேரமாக, கீழிருந்து வரும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு எட்டாத தொலைவில் நின்றபடியே நீச்சலடிக்கும் ஹெலிகள் தமக்குப் பிடித்தமான கணமொன்றில் காகிதக் கட்டுக்களை தம் குதத்தின் வழியே வெளியே தள்ளத் தொடங்கும். சின்னப் பெடியள் பயத்தோடு, அசைந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும் காகிதக் கட்டுக்களை நோக்கி ஓட்டப்பந்தயத்தில் இறங்குவார்கள்.

 அநேகமாக சிவப்பு நிற எழுத்துகளில் அச்சிடப்பட்ட அந்தக் காகிதங்களில் "பயங்கரவாதிகளை நம்பாதீர்கள். படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வாருங்கள்''. இப்படியான "பொருள் பொதிந்த' வாசகங்கள் அடங்கியிருக்கும். 

இதற்குப் பின்னர் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட தாக்குதல் ஹெலிகள் வலம்வரத் தொடங்கின. இவற்றில் இருந்து புறப்படும் றொக்கெற்றுகள் பல வீடுகளில் இரத்தக் குளங்களைத் தோண்டின. இந்த சண்டைக் ஹெலிகளின் கொலைவெறி கடைசிவரை அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால்வரை இந்த "ட்ரெகுலா' ஹெலிகள் அப்பாவிகளின் இரத்தத்தைக் குடிப்பதை நிறுத்தவே இல்லை.
***

இப்போது போர் முடிந்துவிட்ட பின்னர் ஹெலிகளின் அசுமாத்தத்தை காணமுடிவதில்லை. சாகச விளையாட்டுகளுக்காக வட்டமடிக்கும்போதும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளை துரையப்பா அரங்கில் கொண்டுவந்து தரையிறக்கும் போதும் மட்டுமே இப்போது ஹெலிகளைக் காணமுடிகிறது. இப்போது வற்றாப்பளையில் இருந்து நல்லூர் வரை பிரசித்தமான ஆலயங்களின் தேர்களுக்கு பூச்சொரிதலை தமது முக்கிய கடமையாக இந்தக் ஹெலிகள் வரித்துக்கொண்டுள்ளன. 

போர் நிகழ்ந்தபோது வகைதொகையின்றி பலியெடுத்த, தம்முடைய பாவங்களைக் கழுவிக்கொள்ள இந்தக் ஹெலிகள் கடவுளர்களை வசியப்படுத்த முனைகின்றன. கூடவே இந்த வசிய வட்டத்துக்குள் முடிந்தளவுக்கு மக்களையும் இழுப்பதே ஹெலிகளின் நோக்கம். ஆனாலும் இன்னமும் மக்களின் கண்களுக்கு ஹெலிகளின் கொலை முகமே அழிக்க முடியாத பெரும் விம்பமாக மேலெழுந்து நிற்கின்றது.

ஹெலிகள் பூச்சொரியும் போது எழுகின்ற அரோஹரா ஒலி காற்றில் திரிபடைந்து "ஐயோ அம்மா!'' என்றே எங்கும் பரவுகின்றன. News by Onlineuthayan.