ஐயோவும் அரோகராவும்

Posted by Unknown திங்கள், 20 ஆகஸ்ட், 2012 0 கருத்துகள்

மனிதனின் பறப்பு முயற்சிகளில் மைல் கற்களில் ஒன்று உலங்குவானுர்திக் கண்டுபிடிப்பு. காற்றாடிகளின் உதவியுடன் பறக்கும் தொழில்நுட்பம் முதன்முறையாக 1907 ஆம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த போல் கோர்ணு 6 மீற்றர் நீளமான உலங்குவானுர்தியைப் பறக்க வைத்து ஹெலிகளின் சரித்திரத்தைத் தொடக்கிவைத்தார். ஏனைய வானுர்திகளைப் போல் அல்லாமல் இது செங்குத்தாகவே மேல் எழுவதுடன் விரும்பிய திசைகளுக்கு உடனடியாகவே திரும்பிக்கொள்ளும். இத்தகைய தன்மைகளே ஹெலிகளை போர்களின் வாகனமாக்கியது.
 நல்லூர்க் கந்தன் லட்சக்கணக்கான தூக்கிய கைகளை விலக்கியபடி தேரில் ஏறி வலம்வர தொடங்கியிருந்தான். தேருக்காக தன்னுடைய சீருடைகளை களைந்துவிட்டு விடிகாலையிலேயே வேட்டியோடு வந்திருந்த கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க அடிக்கடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அவர் முகத்தில் மலர்ச்சி.

 சடசடத்தபடி வட்டமடித்த ஹெலிகொப்ரர் ஒன்று கந்தனின் தேர் மீது பூக்களை வாரிச் சொரியத் தொடங்கியது.
"அரோஹரா! 
வள்ளி மணவாளனுக்கு அரோஹரா! 
நல்லூர் கந்தனுக்கு அரோஹரா''

கொஞ்ச நேரமாக சோர்ந்துகிடந்த பக்தர்களின் உதடுகள் ஹெலியின் பூமாரியோடு மீண்டும் அரோஹராவை  உச்சரிக்கத் தொடங்கின. சற்றுப்பதிவாக அந்தக் ஹெலி வட்டமடித்தபோது, "உங்கபார்! சப்பாத்தோட நிண்டு பூப் போடுறாங்கள்'' என்று ஹெலியின் வாசலை நோக்கி பக்தர்களின் விரல்களும் கண்களும் நீண்டன. 

கந்தனின் தேரில் சொரிந்து கிடந்த பூவிதழ்களில் ஏனோ மகரந்த வாசனை வரவேயில்லை. மாறாக அவற்றிலெல்லாம் நாள்பட்ட குருதியின் வாடையே அடிப்பதாக முகில் கூட்டங்களில் தொற்றியிருந்தபடி கந்தனின் தேருலாவை கண்டுகளித்துக்கொண்டிருந்த  தேவர்கள் சொல்லிக்கொண்டார்கள். 

கூடவே  ஒவ்வொன்றாய் பிரிகையடைந்து, சகதியாகிக் கிடந்த நிலத்தில் கொட்டுண்டுகிடந்த பூவிதழ்கள் பிய்ந்துபோன சதைத் துண்டங்கள் போலவும், பிணக்குவியல்கள் போலவும் தமக்குப்பட்டதாகவும் அதே வானுலகவாசிகள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 
* * *

ஹெலிகள் பற்றிய ஆரம்பப் பதிவுகள் அச்சமூட்டுபவையாகவே இருந்தன. 90களில் விடிகாலை இருள் கலைய முன்னரே வானத்தில் ஹெலி வட்டமிடத் தொடங்கிவிட்டால் அன்றைக்கு ஏதோ நடக்கப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்துவிடும். புலிகளின் நடமாட்டங்கள், கள நிலவரங்கள், பொதுமக்கள் இடம்பெயரும் திசை என்பவற்றை சில ஹெலிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும். 

இன்னொரு தொகுதிக் ஹெலிகள் பிரதான படைத்தளங்களில் இருந்து துருப்புகளை களமுனைக்கு கொண்டு வந்தபடியே இருக்கும். அவற்றுக்கு பக்கபலமாக கண்மூடித்தனமான சூட்டாதரவை வேறு சில ஹெலிகள் வழங்கும். 

அநேகமாக ஹெலிகளில் இருந்து பெறப்படும் 50 கலிபர் துப்பாக்கிச் சன்னங்கள் சுவர்களையும், பதுங்கு குழிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகளையும் சல்லடையிடும். 
"ஐயோ!'' இந்த ஒரே ஒரு ஓலம் மட்டுமே ஊரெங்கும் பரவி அதிரும்.  

விமானங்களைக் காட்டிலும் மிகத் தாழ்வாக களமுனையில் நடமாடும் ஹெலிகளின் கண்களில் இருந்து தப்புவதற்கு இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் பட்டபாடு கொஞ்சநெஞ்சமல்ல. 

சில வேளைகளில் ஹெலிகளின் கைகளையும் மீறி, மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்கள் பற்றி, விமானங்களுக்கு போட்டுக்கொடுத்து அங்கு மனிதப் பலியை நிறைவேற்றவும் ஹெலிகளே முன் நின்றன. 

ஆனாலும் மாலை வேளைகளில் இரண்டு ஹெலிகள் ஒன்றாக வந்தால் அதன் அர்த்தம் வேறு. நீண்டநேரமாக, கீழிருந்து வரும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு எட்டாத தொலைவில் நின்றபடியே நீச்சலடிக்கும் ஹெலிகள் தமக்குப் பிடித்தமான கணமொன்றில் காகிதக் கட்டுக்களை தம் குதத்தின் வழியே வெளியே தள்ளத் தொடங்கும். சின்னப் பெடியள் பயத்தோடு, அசைந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும் காகிதக் கட்டுக்களை நோக்கி ஓட்டப்பந்தயத்தில் இறங்குவார்கள்.

 அநேகமாக சிவப்பு நிற எழுத்துகளில் அச்சிடப்பட்ட அந்தக் காகிதங்களில் "பயங்கரவாதிகளை நம்பாதீர்கள். படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வாருங்கள்''. இப்படியான "பொருள் பொதிந்த' வாசகங்கள் அடங்கியிருக்கும். 

இதற்குப் பின்னர் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட தாக்குதல் ஹெலிகள் வலம்வரத் தொடங்கின. இவற்றில் இருந்து புறப்படும் றொக்கெற்றுகள் பல வீடுகளில் இரத்தக் குளங்களைத் தோண்டின. இந்த சண்டைக் ஹெலிகளின் கொலைவெறி கடைசிவரை அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால்வரை இந்த "ட்ரெகுலா' ஹெலிகள் அப்பாவிகளின் இரத்தத்தைக் குடிப்பதை நிறுத்தவே இல்லை.
***

இப்போது போர் முடிந்துவிட்ட பின்னர் ஹெலிகளின் அசுமாத்தத்தை காணமுடிவதில்லை. சாகச விளையாட்டுகளுக்காக வட்டமடிக்கும்போதும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளை துரையப்பா அரங்கில் கொண்டுவந்து தரையிறக்கும் போதும் மட்டுமே இப்போது ஹெலிகளைக் காணமுடிகிறது. இப்போது வற்றாப்பளையில் இருந்து நல்லூர் வரை பிரசித்தமான ஆலயங்களின் தேர்களுக்கு பூச்சொரிதலை தமது முக்கிய கடமையாக இந்தக் ஹெலிகள் வரித்துக்கொண்டுள்ளன. 

போர் நிகழ்ந்தபோது வகைதொகையின்றி பலியெடுத்த, தம்முடைய பாவங்களைக் கழுவிக்கொள்ள இந்தக் ஹெலிகள் கடவுளர்களை வசியப்படுத்த முனைகின்றன. கூடவே இந்த வசிய வட்டத்துக்குள் முடிந்தளவுக்கு மக்களையும் இழுப்பதே ஹெலிகளின் நோக்கம். ஆனாலும் இன்னமும் மக்களின் கண்களுக்கு ஹெலிகளின் கொலை முகமே அழிக்க முடியாத பெரும் விம்பமாக மேலெழுந்து நிற்கின்றது.

ஹெலிகள் பூச்சொரியும் போது எழுகின்ற அரோஹரா ஒலி காற்றில் திரிபடைந்து "ஐயோ அம்மா!'' என்றே எங்கும் பரவுகின்றன. News by Onlineuthayan.

நல்லிணக்க செயற்பாட்டில் தென்னாபிரிக்காவின் ஈடுபாடு முடங்கியுள்ள பேச்சுக்கள் ஆரம்பமாக உதவுமா?

Posted by Unknown செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012 0 கருத்துகள்
*மக்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பதை உலகுக்கு காட்டுவதே மாகாண சபைத் தேர்தலின் நோக்கம் *காவி உடைதரித்த பயங்கரவாதம் என்ற மு.கா.தலைவரின் கருத்து ஏற்படுத்தியுள்ள தாக்கம் *நல்லிணக்க செயற்பாட்டில் தென்னாபிரிக்க அமைச்சர் குழுவின் ஈடுபாடு *நவிபிள்ளையின் பதவி இன்னர் சிற்றி தரும் தகவல்
 தொகுப்பு:கோகுலன்

சண்டே ரைம்ஸ் பத்திரிகை
நேற்று முன்தினம் 12.08.2012 அன்று
எழுதியிருந்த அரசியல் விமர்சனக் கட்டுரையில்
இருந்து ஒரு பகுதி இது 


வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போல இந்த நாள்களில் மிக சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் வேறுயாருமே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர் "பிஸியாக' இருக்கின்றார்.

 விளம்பரம் ஏதும் இல்லாமலே இந்த மூன்று மாகாணங்களிலுமுள்ள பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களது கூட்டங்களை அவர் தலைமை வகித்து நடத்தி வருகின்றார். 

அவர்கள் அனைவருமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும் எண்ணிக்கையான வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் இது அவருக்கு முக்கியத்துவமாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமது அபிவிருத்திப் பணிகள் உட்பட தமது அரசின் சாதனைகளை மக்கள் அபரிமிதமாக ஆதரித்து நிற்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட அவர் விரும்புகிறார். 

ராஜபக்ஷ அரசுக்கு மக்களின் முழு ஆதரவும் இருக்கிறது என்பதை உள்நாட்டுக்கு மட்டுமின்றி வெளிநாட்டுக்கும் காட்டவேண்டியிருக்கிறது அவருக்கு. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அரசு தனது மக்கள் நலத்திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நீர் இறைக்கும் பம்பிகளைப் பெற்றுவருகிறார்கள். 

தமது குடியிருப்புக்களை திருத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு வீடு திருத்தும்  உதவிகளும் வழங்கப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்கூட்டியே சட்டப்படி சாத்தியமான வகையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு இலங்கையில் ஏற்கனவே குழம்பிப்போயுள்ள அரசியல் சூழ்நிலையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்த மருதூரில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து மேலும் குழப்புவதாக அமைந்துவிட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக்கட்டிவிட்டார். 

அதேபோல் அவர் காவி உடைப் பயங்கரவாதத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று அவர் கூறியதாகத் தெரிகின்றது. புனித ரம்ழான் மாத காலத்தில் குறைந்தது இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
  
இந்தக் கருத்து பௌத்த சமய குருமார்களின் உணர்ச்சிகளைத் தொட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் உறுப்பினராக இருந்து கொண்டே இவ்வாறான ஒரு கருத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பதை அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். 

ரவூப் ஹக்கீம் கருத்து முஸ்லிம் காங்கிரஸினதும் அவருடையதுமான இரட்டை நிலைப்பாட்டையும் ஏமாற்றும் தன்மையையும் எடுத்துக் காட்டுவதாக ஜாதிகஹெல உறுமயவின் பிரதிச்செயலாளர் உதயா கம்மன்பில்ல கண்டித்திருக்கிறார்.

 தென்இலங்கையில் அவர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பேசும் போது சிங்கள குருமாரையும் பௌத்தமதத்தையும் அவர் பாராட்டுகிறார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் அவர் தமிழில் பேசும் போது அதே குருமார்களை காவி உடை பயங்கரவாதிகள் என்று திட்டுகிறார். இந்த  நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த துறவிகளை மதிக்கிறார்கள் அவர்களை புனிதமானவர்கள் என்றும் கருதுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது போலும் என்று கூறியுள்ளார் காமன்பில்ல. 

அரசு தரப்பில் கடந்த வியாழக்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிடுகையில் இந்த விடயம் புலனாய்வு செய்யப்படும் என்று  தெரிவித்திருந்தார். 
*       *                  *

நல்லிணக்க முயற்சியில் தெ.ஆபிரிக்கா
இந்தவாரம் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் அரசின் மீள் நல்லிணக்க நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா நடுவராக செயற்படக்கூடும் என்பதாகும். அந்த நாட்டின் பிரதி வெளியுறவு அமைச்சர் எப்ராகிம். எப்ராகிம் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார். 

1980 களின் ஆரம்பத்தில் அந்த நாட்டு அமைச்சின் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்திருந்தவர் அவர். அவருடன் ஹொயிலொப் மெயர் என்பவரும் வந்திருந்தார். தென்னாபிரிக்கா சிக்கலின் போது அவர் தென்னாபிரிக்க தேசியக் கட்சியின் பிரதம பேச்சாளராக இருந்தவர் தென்னாபிரிக்க சிக்கல் தீர்க்கப்படுவதில் முக்கிய பங்காளியாக செயற்பட்டிருந்தார். தென்னாபிரிக்க இன ஒதுக்கல் கொள்கை இறுதிக் கட்டத்தில் இவர் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் பேச்சாளர் இரில் ரம்மோசாவுடன் இணைந்து செயற்பட்டு 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு உதவினார்.

தேர்தலின் பின்னரும் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் அமைச்சரவையில் மெயர் அரசமைப்புத் துறைக்கான பதவியில் தொடர்ந்து பணியாற்றினார். 

தென்னாபிரிக்க தூதுவர் கே.ஒப்.டொயிட்கே சகிதம் தென்னாபிரிக்கக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவர்களைச் சந்தித்திருந்தது. 

தென்னாபிரிக்கக் குழுவினரின் வருகை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்ஸின் முன் முயற்சியில் இடம்பெற்றதாகவும் நிலைமைகளை ஆராயும் முயற்சி என்று தங்கள் வருகையை அவர்கள் வர்ணித்துக்கொண்டதாகவும் தெரிக்கின்றது. மீள் நல்லிணக்க முயற்சிகளில் தென்னாபிரிக்காவின் ஈடுபாடு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூட இலங்கைக்கு நல்லபெயரைக் கொண்டுவரும் என்று சொல்லலாம் குறைந்தபட்சம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அது தீவிரமாக இருக்கிறது என்ற வகையில். 

எதுவானாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு செய்ய தென்னாபிரிக்கக் குழுவினரால் சாத்தியமாகுமா என்பது பல லட்சம் ரூபா பெறுமதியான கேள்வியாகத்தான் இருக்கின்றது. 

13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாகச் செயற்படுத்துவதற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்தியா விடுக்கும் கோரிக்கைக்கு இலங்கை செவி சாய்க்காமல் இருந்துவரும் ஒரு கால கட்டத்தில் தென்னாபிரிக்காவின் இந்த முயற்சி ஆரம்பமாகியிருக்கின்றது. 

தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் நாடாளுமன்றக் குழுவின் மூலமாக மட்டுமே செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தீர்க்கமாக அறிவித்திருக்கிறார். மனித உரிமைகள் தொடர்பான இலங்கை அரசின் அறிக்கை ஒன்றை ஐ.நா வுக்கான இலங்கை தூதுவர் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. செயலகத்தில் கடந்த புதன்கிழமை கையளித்தார். 

இந்த அறிக்கையின் இறுதி வடிவம் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியவர்களால் தயார்செய்யப்பட்டிருந்தது. 

2008 ஆம் ஆண்டு உலக பருவகால ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி அரசினால் தன் முனைப்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயற்றிட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்பான பருவகால ஆய்வு நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவிருக்கின்றது. கடந்த மார்ச் மாதம் மனிதஉரிமைகள் சபையில் அமெரிக்க ஆதரவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வரவிருக்கும் ஐ.நா.நிபுணர்களை நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிப்பதென்று அரசு தீர்மானித்திருக்கிறது. 

வருடமுடிவுக்குள் மனிதஉரிமைகள் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் இலங்கை  வருவதற்கு வாய்ப்புள்ளது. 
*       *                  *

நவநீதம்பிள்ளை விவகாரம்

நவநீதம்பிள்ளை மனித உரிமை சபையின் தலைவராக நீடித்திருப்பது பற்றி இன்னர்சிற்றி பிரஸ் பத்திரிகையாளர் மெத்யூலீ பின்வரும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
நவநீதம்பிள்ளை நான்கு வருடங்களுக்கு பதிலாக இரண்டு வருடங்கள் மட்டுமே பதவியிலிருப்பதற்கு அவர் வற்புறுத்தப்பட்டாரா அல்லது அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றி இன்னர் சிற்றி  அவரிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்வியெழுப்பியது. அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் இரண்டு வருட பதவிக்காலத்துக்கு சம்மதிப்பதற்கான பேரம் எப்படி நடைபெற்றது என்பது நம்பகமான  வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவும் மற்றவர்களும் வற்புறுத்தியதன் பேரில் நவநீதம்பிள்ளை இரண்டாவது தடவையும் பதவியில் இருக்க முடியாது என்ற தகவலை செயலாளர் நாயகம் பான்கீமூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இது நல்லபடியாக தெரியும் வகையில் பதவியில் இருந்து அவர் தாமே விலகிக்கொள்வதே நல்லது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நவநீதம்பிள்ளை அதனை மறுத்து இதைப் பகிரங்கப்படுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதன் பேரில் இதில் ஒரு முடிவு காண்பதற்கு பிள்ளையின் சொந்த நாடான தென்னாபிரிக்காவிடம் அணுகப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மேலாளர் அந்தஸ்துள்ள உதவி செயலாளர் நாயகம் பதவி வழங்குவதற்கும் விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கு ஈடாக நவிபிள்ளையை இணங்கச் செய்யவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 

ஆனால் இதற்கு தென்னாபிரிக்க சம்மதிக்கவில்லை அதன் பேரில் பிள்ளைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளையின் அந்தஸ்து பலவீனமாகியுள்ளது. இனி பிள்ளையும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வருவார்கள். 

40 ஆயிரம் பேர் கொல்லப்படுவதற்கான பொறுப்புக் கூறலும் இல்லாத நிலையில் இவர்களின் பயணம் இடம்பெறவிருக்கிறது. உண்øம யில் பான்கீமூனின் நிபுணர்குழுவின் அறிக்கையின்படி பொறுப்பான ஒரு இராணுவ ஜெனரலே அவருக்கு ஆலோசனை வழங்குபவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பயணம் நடைபெறவிருக்கிறது. 

எனவே நவநீதம்பிள்ளை இனி என்ன சொல்வார் அல்லது அவரால் என்ன சொல்ல முடியும் என்பதை இனிமேல் தான் பார்க்கவேண்டும்இவ்வாறு மெத்யூலீ தெரிவித்துள்ளார்.

சிங்கள சகோதரர்களால் ஆதாரங்கள் இல்லாமல் அழிக்கப்படும் எம் ஈழத்தமிழினம்

Posted by Unknown சனி, 11 ஆகஸ்ட், 2012 0 கருத்துகள்
சிங்கள சகோதரர்களால் ஆதாரங்கள் இல்லாமல் எமது ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாக டெல்றுக்‌ஷனின் உயிரிழப்பு தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்
 
சிறிலங்கா சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சிறைக் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது விசாரணை செய்ய வேண்டும் என்று பலமுறை கோரியும், உண்ணாவிரதமும் இருந்து வந்தனர். இது அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே கடைசியில் போய் முடிகின்றது.
 
அந்த வகையில் இலங்கை வரலாற்றில் அன்று முதல் அதாவது குட்டி மணி தங்கத்துரை தொடக்கம் இன்று டெல்றொக்சன் வரை சிறைச்சாலையில் உயிர் பறிக்கும் புதிய கலாச்சாரம் ஒன்றை இந்த சிங்கள அரசு அரங்கேற்றி வருகின்றது.
 
இவ்வாறு சிறைச்சாலைகளில் உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கு காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசு வழமை போலவே விசாரணைகள் இடம் பெறும் அல்லது மாரடைப்பு வந்து இறந்து விட்டார் என்று எல்லாம் கூறிவருகின்றது.
 
இன்னும் எத்தனையோ எமது உறவுகள் தமது மண்ணை இழந்து கட்டிய மனையாள் பிள்ளை சுற்றம் எல்லாவற்றையும் இழந்து எப்போதாவது விடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் சிறைகளில் வாடுகின்றார்கள் இவர்களுக்கும் நாளை என்ன நடக்குமே என்று சிங்கள அரசைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
 
முன்னதாக வவுனியாவை சேர்ந்த நிமலரூபன் உயிரிழந்திருந்து ஒரு மாதம் நிறைவடையாத நிலையில் நேற்று முந்தினம் இரவு கோமாவிலிருந்த மற்றுமொரு தமிழ் அரசியல் கைதி உயிரிழந்துள்ளார். 
 
இந்த கைதிகளின் மரணங்கள் சாதாரணமாக நடக்கவில்லை சிறைச்சாலையில் உள்ள சிங்கள சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் அடித்து எழும்புகள் நெருக்கப்பட்டு, நரம்புகள் செயலிழக்கப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டார்கள்.
 
முள்ளிவாக்காலில் கொத்துக் கொத்தாக கொத்துக் கொல்லப்பட்ட போதும் கயங்களுடன் கிடந்த எமது  உறவுகளை அந்த இடத்திலே வைத்து உயிருடன் கனரக வாகனங்களை கொண்டு புதைத்த சிங்கள அரசுக்கு இது ஒன்றும் புதிய விடயங்களல்ல.
 
இலங்கை மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். இன ஒற்றுமை கட்டி எழுப்ப வேண்டும் என்றேல்லாம் கூறிவருகின்ற ஒரு அமைச்சர் கைதியின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளபடும் இதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என குறியுள்ளார்.
 
ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் உயிர்களை பறிப்பது என்பது இந்த சிங்கள ஆதிக்க வாதிகளுக்கும் அரசுக்கும் கொள்ளை ஆசையில் தான் இருக்கின்றன என்றுதான் கருத வேண்டும்.
 
போதையில் இருந்ததற்காவும் அவர்கள் தப்பித்துச்செல்வதற்கு உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு ஐந்து கவல்துறை அதிகாரிகளை வேலை நிறுத்தம் செய்த கடமை தவறாத கவல்துறை பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதி தாக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கும் அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் என்னெ நடவடிக்கை எடுக்கப் போகிறது............? 
 
இல்லை என்றால் இதனை கண்டு பிடிப்பதற்கு இஸ்கொட்லான் பொலிசாரையா அழைக்கப் போகிறார்களா? எமது இனத்திற்கு சாவு என்பது தொடர்கதையாகவே எம்மை துரத்தியும் வருகின்றது.
 
இலங்கையில் காலங்காலமாக காரணமின்றி சிங்கள சகோதர்களால் கொலை செய்யப்பட்டுவரும் எமது உறவுகளைப் பற்றி இந்த சர்வதேச சமூகம் என்ன சொல்லப் போகிறது என்ற கேள்வி இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. News By:Onlineuthayan.com

அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி

Posted by Unknown ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012 0 கருத்துகள்

புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு
அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி


 வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும்.

 இவ்வாறு நேற்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகள் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடம். இதற்காக அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடவேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை.

புலிகள் போல் நிபந்தனைகளை விதித்துக்கொண்டு பேச்சுக்கு வராமல் வேறு அழுத்தங்களைக் கொடுப்பது தவறு. உலகத் தலைவர்களுடன் நான் பேச்சுகளை நடத்தும் போது இந்த நிலைமையைத்தான் விளக்கிக் கூறுகிறேன். இது எனது தனிப்பட்ட விடயமல்ல. இது அனைவரினதும் பொறுப்பு. இதற்கு முன்வராத கட்சி பொறுப்பிலிருந்து தவறிய ஒரு கட்சியாகவே கருதப்படும்.

தேர்தல் தேவைதான்
தேர்தலை நாங்கள் நடத்துவதால் சிவில் சமூக அமைப்புகளுக்குப் பிரச்சினை. தேர்தல் நடத்தாவிட்டாலும் சிவில் அமைப்புகள் கூக்குரலிடும். தேர்தல் வேண்டாமென்று ஓர் எதிர்க்கட்சி நீதிமன்றம் செல்வதை இங்குதான் முதற்றடவையாகப் பார்த்திருக்கின்றேன். 

நாங்கள் தேர்தலுக்குப் பயந்தவர்கள் அல்லர். மக்களின் கருத்தை நாம் அவ்வப்போது அறியவேண்டியிருப்பதால் தேர்தலை நடத்துவதில் தவறில்லை. தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை.

கட்டுப்பாடு
இணைய ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் சேறு பூசும் செயற்பாடுகள் குறித்து அரசு முழுக்கவனமும் கொண்டுள்ளது. ஊடகத் தர்மத்தை மீறும் எவரும் தாம் செய்வது சரியா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காகத் தான்தோன்றித்தனமாக செயற்படக்கூடாது.

எப்போதும் நாங்கள் இந்தியாவுடன் சிநேகபூர்வ முறையில் செயற்பட்டு வருகிறோம். பல்வேறு சிக்கல்கள் குறித்து நாம் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி வருகிறோம். அண்மையில் நான் இந்தியப் பிரதமர் மன்மோகனுடன் பேச்சு நடத்தியபோது என்னுடன் இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க நிலைமைகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு கையாளும். எவ்வாறாயினும், எமது நாட்டின் பாதுகாப்பு, இறைமை எவருக்கும் தாரைவார்க்கப்படமாட்டாது. எந்த சக்திக்கும் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் அது எங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில், நாங்கள் மத்தியஅரசுடன்தான் தொடர்புட்டு செயற்பட்டு வருகிறோம். நாங்கள் வீணாகக் குழப்பமடையத் தேவையில்லை  என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி.